"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


NRI கணவனை விமான நிலையத்தில் கைது செய்வது எப்படி?

NRI ஆண்களை நம்பி திருமணம் செய்துகொள்ளும் அப்பாவி இந்திய மருமகள்கள் கணவன் தனது சொற்படி நடக்காதபோது பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவது வழக்கமாக இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளில் ஒன்றாகும். இதுபோன்ற சமயத்தில் வரதட்சணை சட்டங்களைப் (IPC498A, Dowry Prohibition Act) பயன்படுத்தி கணவனையும், அவனது குடும்பத்தையும் “வழிக்குக்”கொண்டுவருவதுதான் பல காலமாக மருமகள்களுக்கு இருந்துவரும் ஒரே வழிமுறையாகும்.

ஆனால் வெளிநாட்டில் வாழும் NRI கணவன் மீது இந்தியாவில் வரதட்சணை புகார் கொடுக்கும்போது முடிந்தவரை காவல்துறை நண்பர்கள் இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறைப்பிடித்துவிடுவார்கள். ஆனால் NRI கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தப்பித்துவிடுவான். இதுபோன்ற சூழலில் கணவனை சிறையில் தள்ள முடியாமல் பல மருமகள்கள் குழம்பிய மனதுடன் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பார்கள். இதுவும் ஒருவகையில் NRI கணவன் மருமகளை மனதளவில் கொடுமை செய்வதற்குச் சமமாகும். இதுபோன்ற சூழலில் இருக்கும் மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறை ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர்தான் LOC என்று செல்லமாக அழைக்கப்படும் “Lookout Circular”.

கொலை, கொள்ளை என பல பெரிய குற்றங்களை செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பமுயலும் குற்றவாளி, அல்லது முன்பே தப்பித்துச் சென்றுவிட்ட குற்றவாளி தலைமறைவாக இருந்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பும்போது கைது செய்வதற்கு வசதியாக இந்த LOC பல காலமாக காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழிமுறைதான் இப்போது மருமகள்களுக்கு தங்களின் குறிக்கோளை அடைய உதவும் கருவியாக பயன்படுகிறது.

மருமகளின் சொல்லுக்கு கட்டுப்படாத கணவன் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தவுடன் புலன் விசாரணை அதிகாரியை (Investigation Officer, IO) சற்று “கவனித்தால்” போதும். உடனடியாக NRI கணவனை “தலைமறைவான, தேடப்பட்டுவரும் கொடிய (கொலைக்) குற்றவாளி” என்ற முத்திரையைக் குத்தி ஒரு அறிக்கை தயார் செய்து இந்தியாவில் இருக்கும் அனைத்து விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள், எல்லைகள் என அனைத்து இடங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவிடுவார்கள்.

பிறகு NRI கணவன் எப்போது இந்தியாவிற்குள் நுழைந்தாலும் உடனடியாக எலியைப் பிடிப்பதுபோல விமான நிலையத்தில் பிடித்துவைத்துக்கொண்டு நீங்கள் புகார் கொடுத்த காவல் நிலையத்தில் உங்களின் காவல்துறை நண்பர்களுக்கு விமான நிலைய அதிகாரிகள் செய்தி அனுப்பிவிடுவார்கள்.

உடனே காவல்துறை நண்பர்கள் இந்த நற்செய்தியை மருமகளுடன் பகிர்ந்துகொண்டு கணவனை கைது செய்ய வேண்டும் என்ற மருமகளின் நெடுநாளைய ஏக்கத்தை போக்குவார்கள். பிறகென்ன நீங்கள் வழக்கம்போல இந்த இனிய செய்தியைக் கேட்டு “தலை தீபாவளியை” விட மகிழ்ச்சியான நாளாக அந்த தினத்தைக் கொண்டாடலாம். மற்றொரு சந்தோஷமான செய்தி என்னவென்றால் வழக்கம்போல நமது மீடியா நண்பர்கள் இந்த செய்தியை பத்திரிக்கையில் பிரசுரித்து NRI கணவனுக்கு “இரட்டை வரவேற்பு அளித்து” மருமகள்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி விடுவார்கள்.

அதுபோல ஒரு புத்திசாலி மருமகளின் சமயோசிதமான செயலால் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட ஒரு கணவனைப் பற்றிய செய்தியைத் தருகிறேன் படித்து கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

வரதட்சணை வழக்கில் அமெரிக்கா தப்பி ஓடிய என்ஜீனியர் சென்னை விமான நிலையத்தில் கைது

பிப்ரவரி 18, 2012தினத்தந்தி
படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்

=====

இது சாத்தியமா? என்று உங்களுக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கலாம். கண்டிப்பாக நம்புங்கள். 100% இது சாத்தியம். இந்தியாவில் பெரிய குற்றங்களை செய்தவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பி தப்பிக்க உதவிசெய்தாலும் செய்வார்கள் ஆனால் மருமகளின் வரதட்சணை வழக்கில் சிக்கும் NRI கணவனை மட்டும் விடவே மாட்டார்கள். மருமகளின் நலனில் அக்கறையுள்ள நமது நாட்டில் மருமகள்கள் தயங்காமல் இந்த வழிமுறையைப் பயன்படுத்தி NRI கணவன்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கலாம். வழக்கம்போல இந்த வழிமுறை மருமகள்களுக்கு முற்றிலும் இலவசம். அதனால் மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி NRI கணவனை விமான நியைத்தில் கைதுசெய்து பாடம் கற்பிக்கலாம்.

உங்களுக்கு நம்பிக்கை பிறக்க பின்வரும் இரண்டு செய்திகளைப் படித்துப் பாருங்கள்...

==========
செய்தி - 1
தனி விமானத்தில் வெளிநாடு கிளம்பினார் கலாநிதி!
பிப்ரவரி 11,2012 தினமலர்

சென்னை: 2 ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்க துறையினர் சட்ட நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வரும் வேளையில் சன்குழும தலைவர் கலாநிதி தனது மனைவியுடன் இத்தாலி புறப்பட்டு சென்றார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆதாயம் பெற்ற மாக்ஸிஸ் நிறுவனம் சன் குழுமத்தில் ரூ. 550 கோடியை முதலீடு செய்தது. இந்த பணம் பெற்றதன் நோக்கம் என்ன என்பதும், இது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்தும் மத்திய அமலாக்க இயக்குனரகம் விசாரித்து கடந்த 7ம் தேதி வழக்கை பதிவு செய்தது. மாஜி அமைச்சர் தயாநிதி மற்றும் கலாநிதி குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சி.பி.ஐ.,தாக்கல் செய்த வழக்கும் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ( வெள்ளிக்கிழமை) மதியம் 2. 20., க்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சன் குழும சிறப்பு விமானம் மூலம் கலாநிதி இத்தாலிக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் மனைவி காவேரி கலாநிதி, சன்குழும தலைமை அலுவலர் விஜயகுமார், இவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் சென்றனர். இதனை ஏர்போர்ட் அலுவலக வட்டாரம் மற்றும் உளவு பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.

இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகருக்குசென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்க துறையின் வழக்கு பதிவிற்கு பின்னர் விசாரணைக்கு அழைப்பர். இந்நிலையில் கலாநிதி இத்தாலி பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எப்போது திரும்புவார் என்ற விவரம் வெளியே அறியப்படவில்லை.
=====
செய்தி - 2

தலையங்கம்: யார் குற்றவாளி?
17 Jun 2010 தினமணி தலையங்கத்தின் ஒரு பகுதி

சுமார் 23,000 பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சம்பவத்தில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்பதும், குறைந்தபட்ச இழப்பீட்டைத்தான் அரசு பெற்றுத்தந்தது என்பதும்தான் இதுவரையிலும் விவாதமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை.

வாரன் ஆன்டர்சனை போபாலிலிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குத் தப்பவிட்டனர் என்ற உண்மை இப்போது வெளியுலகுக்குத் தெரிந்த பிறகு, அதற்குக் காரணமே அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்தான் என்று கூசாமல் பழிகூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது காங்கிரஸ்.


அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி "சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுமே என்று அஞ்சியே வாரன் ஆன்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டதாக'வும் அர்ஜுன் சிங் அந்த நோக்கிலேயே செயல்பட்டதாகவும் கூறி அவரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். இது இந்திய அரசின் நிர்வாக லட்சணம் எப்படி இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.
==========


23,000 பேர் இறந்துபோக காரணமான போபால் விஷவாயு கசிவில் நேரடித்தொடர்புடைய ஆட்களை பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி அமெரிக்காவிற்கு அனுப்பிய இதே நாட்டில் மருமகளை கொடுமை செய்தார் என்ற ஒரு புகாரின் அடிப்படையில் விமான நிலையத்தில் கணவனை கைது செய்திருக்கிறார்கள். இதிலிருந்து மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் 23,000 அப்பாவிகள் இறந்து அவர்களின் குடும்பங்கள் விடும் கண்ணீரைவிட ஒரே ஒரு இந்திய மருமகளின் கண்ணீருக்கு ஆற்றல் மிகவும் அதிகம்!

அதனால் மருமகள்கள் தங்களது கண்ணீரை இந்தியாவில் தக்க சமயத்தில் சிந்தினால் அதன் மூலம் தங்களது குறிக்கோளை எளிதாக அடையலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் உங்களுக்கு உதவினாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து அவற்றை பக்குவமாகப் பயன்படுத்தத் தெரிந்தால்தான் கணவனின் குடும்பத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். இதுதான் இந்திய மருமகளாக இருப்பதற்கான அடிப்படை ரகசியம்.

இதுபோன்ற பல அருமையான வழிமுறைகளைப் பற்றி மேலும் கலந்தாலோசிக்க “ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!

NRI கணவன்களுக்கு பாடம் புகட்டுவது தொடர்பாக மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மற்ற பதிவுகள்...

வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி?

NRI கணவனை “கட்டுக்குள்” வைப்பது எப்படி? - இளம் மருமகளுக்கு மட்டும்

NRI மாப்பிள்ளையா? வேண்டவே வேண்டாம்

NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?