"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மருமகளை ஏமாற்றும் "மாமக்கள்"

வரதட்சணை தடுப்புச்சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி? பாடம் 4

வழக்கம் போல் முன்பு சொல்லிய மற்ற பாடங்களை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போது தான் இந்தப் பாடம் எளிதாகப் புரியும்.

மருமகள்களை ஏமாற்றும் மாமக்கள்!
தலைப்பு சரிதான். எழுத்துப்பிழையோ என்று எண்ண வேண்டாம். மாமாக்கள் அல்ல. மா மக்கள் என்றால் பெரிய மனிதர்கள் என்று அர்த்தம்.

இதுவரை மருமகள்கள் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டம் (Dowry Prohibition Act), பெண்கொடுமை சட்டம் (IPC498A) போன்ற சட்டங்களைப் பற்றியும் அவற்றை எப்படித் திறமையாகப் பயன்படுத்தி கணவனையும், மாமியார் குடும்பத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது, தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்வது எப்படி என்பதையும் சில உதாரணங்களுடன் தெரிந்துகொண்டீர்கள். இனி இவற்றை நீங்கள் பயன்படுத்தும்போது ஏற்படும் இடையூறுகளைப் பற்றி விளக்குகிறேன்.

"சாமி வரங்கொடுத்தாலும் அதை பூசாரி தடுப்பது போல" என்று உங்கள் வீட்டில் இருக்கும் சில பெரிசுகள் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருக்கும். அதற்கு முழு அர்த்தத்தை நீங்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்தும்போது தான் உணர்ந்து கொள்வீர்கள்.

அதாவது அரசாங்கம் என்ற கடவுள் உங்களின் வாழ்க்கையை வளமாக்க வரம் கொடுப்பதுபோல பல சட்டங்களைக் கொடுத்திருந்தாலும் அவற்றை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியாமல் அவற்றைத்தடுக்கும் பூசாரிகள் போல பலர் இடையூறு செய்து அந்த வரங்களின் பலனை தாங்கள் அனுபவிக்க முயற்சிசெய்வார்கள். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால் தான் நீங்கள் விழிப்புடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து சட்டங்களின் முழுப்பலனை அனுபவிக்க முடியும்.

முந்தைய செய்தியில் +2 மருமகள் கொடுத்த வரதட்சணைப் புகாரை போலிஸ் சரியாகக் கண்டுகொள்ளவில்லை என்று செய்தி வந்திருந்ததைப் பார்த்தோம். இது போன்ற பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பதைப் பற்றியும் விளக்கியிருந்தேன். இது மருமகள்களுக்கு ஏற்படும் முதல்கட்ட இடையூறு. இதைத்தாண்டி வந்து வெற்றிகரமாக புகாரைப் பதிவு செய்த பிறகு அடுத்த கட்டமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பலனில் பங்குபோட சிலர் முயற்சிசெய்வார்கள். ஏமாந்துவிடாதீர்கள்!

ஏதோ மருமகளுக்கு நல்லது செய்வதற்காகவே இந்தப் புனிதப் பணியில் ஈடுபடுவது போல சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு முன்வருவார்கள். விட்டுவிடாதீர்கள். குறிப்பாக புகாரைப் பதிவு செய்த நபரும், புகாரை எழுதுவதற்கு உங்களுக்கு உதவி செய்த சட்டம் படித்தவரும் கூட்டணியாகச் சேர்ந்துகொண்டு "பஞ்சாயத்து" என்ற பெயரில் உங்களின் வருமானத்தில் பங்குபோட முயற்சி செய்வார்கள். இது எப்படி நடக்கும் என்று விளக்கமாக தெரிந்துகொள்ளுங்கள்.

முந்தைய பாடங்களில் சொல்லப்பட்டதுபோல எல்லா மருமகள்களும் வரதட்சணைகொடுமைக்காக இந்த சட்டங்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற அவசியமில்லை. சிலருக்குப் பணத் தேவை இருக்கலாம், சிலருக்கு இருக்கின்ற ஆளை வெட்டிவிட்டு வேறொரு ஆளுடன் சேர்ந்துகொள்ளலாம் என்ற பல உயரிய நோக்கங்கள் இருக்கலாம். இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சரியப்படாதீர்கள். நான் எழுதுவதற்காக ஏதோ சும்மா சொல்வதாக நினைக்கவேண்டாம். அதற்கான ஆதாரமாக தினமலரில் வந்துள்ள செய்தியின் ஒரு பகுதியைப் பாருங்கள் :


இளைய தலைமுறையினர், தற்போதைய அவசர கால வாழ்க்கையில் கணவனோ மனைவியோ இருவரில், ஒருவர் தன்னை விட பணத்திலும் குணத்திலும் சிறந்தவர்கள் கிடைத்தால் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பழைய கணவன் அல்லது மனைவியைக் கழட்டி விடுகின்றனர். இதனால், கணவன் மனைவி உறவு என்பது பாதுகாப்பில்லாமல் தொடர்கிறது.


செய்தியில் இருப்பது போல கணவன்கள் நினைத்தபடி மனைவியை அவ்வளவு எளிதாகக் கழற்றிவிட முடியாது. ஆனால் மனைவிக்கு 498A போன்ற சட்டங்கள் கைகொடுத்து அவர்களது எண்ணத்தை எளிதாக ஈடேற்றிவைக்கின்றன.

இது போன்று சட்டத்தின் மூலம் உதவிபெறும் மருமகள்கள் போகிற போக்கில் கைச்செலவிற்கு பணம் தேவையென்றால் இந்த 498A கேசைப் போட்டுவிட்டால் முட்டாள் கணவன்கள் கைதானவுடன் சொல்லிவைத்தது போலவே கையில் பணத்துடன் வந்து நிற்பார்கள். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிந்தாலும் எவ்வளவு பணம் வேண்டுமோ கொடுத்துவிட்டு கேசை முடித்துவிட்டு தப்பிப்பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தோடு நிறைய கணவன்கள் இருக்கிறார்கள் நாட்டில்.

ஏனென்றால் கைதானவுடன் தான் இந்த முட்டாள்களுக்கு ஞானம் வரும். திருமணத்தின் போது தாங்கள் மனைவியிடம் கொடுத்த "498A ரிமோட் கண்ட்ரோல்" இப்போது தான் ஞாபகத்திற்கே வரும். மருமகள்களுக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்ள சட்டங்கள் இருப்பது போல கணவன்களுக்கு எந்த சட்டங்களும் இந்த நாட்டில் கிடையாது என்று அப்போதுதான் தேவலோகத்திலிருந்து புதியதாக ஒரு வாக்கு அவர்களின் காதில் ஒலிக்கும்! அதுவரை முட்டாளாக இருந்த கணவனுக்கு உடனடியாக ஞானம் பிறக்கும்!

அதனால் குடும்பத்தோடு கைதாகி வாழ்நாள் முழுவதும் சீரழிவதைவிட கையில் இருக்கின்ற காசை போட்டு இந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு எங்காவது கண்காணாமல் போய்விடலாம் என்று முடிவுசெய்து மருமகள் தரப்பிலிருந்து பேரம் பேசுவதற்கு ஏதாவது சிக்னல் வருகிறதா என்று வழி மேல் விழிவைத்துக் காத்துக்கிடப்பார்கள்.

இது போன்ற நேரத்தில்தான் மருமகள்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இறைச்சி வாசத்தைக் குறிவைத்துப் பறந்து வரும் பிணந்திண்ணிக் கழுகுகள் போல சிலர் மருமகள்களுக்கும் அவரது கணவனின் குடும்பத்திற்கும் இடையே பேரம் பேசி வேலையை முடித்துத்தருவதாக வருவார்கள்.

ஆனால் இவர்கள் சொன்னபடி வேலையை முடிக்காமல் கணவனிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு ஏதோ பாவப்பட்டு அவர்கள் வீட்டு காசை உங்களுக்கு பிச்சை போடுவது போல ஒரு தொகையை உங்களுக்குக் கொடுப்பார்கள். சிலசமயம் கொடுக்காமலும் போகலாம்!

இதுபோன்று அப்பாவித்தனமாக ஏமாந்து விடாமல் பேச்சுவார்த்தையில் நீங்களே நேரடியாக ஈடுபட்டு வேண்டியதை நேரடியாகப் பெற்றுக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் உறவிற்கு நடுவில் இடைத்தரகர்கள் எதற்கு? கடவுள் வரம் கொடுத்திருப்பது உங்களுக்கு அதற்கு நடுவில் பூசாரி எதற்கு? கிடைத்த வரத்தின் முழுப்பலனையும் பெற்றுக்கொள்ள மருமகள்கள் மட்டுமே உரிமையுடையவர்கள்.

இது போல மருமகள்களின் நியாயமான வருமானத்தில் மாமக்கள் "கையைவைத்த" சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. அதனால் மருமகள்கள் தாங்கள் உழைத்து சுயமாக சம்பாதிக்கும் பணத்தில் அடுத்தவர் குறுக்கிட்டுப் பங்கிடுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அதே சமயம் நீங்கள் இருக்கும் போது உங்களது கணவரை அடுத்தவர் ஏமாற்றவும் இடமளிக்கக்கூடாது. என்ன இருந்தாலும் மருமகள்களுக்கும் பாசம் இருக்குமல்லவா? தங்கள் கண்ணெதிரேயே கணவரை அடுத்தவர்கள் ஏமாற்றுவதைப் பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் ஒன்றும் கல்நெஞ்சக்காரர்கள் இல்லை.

இது வேலியே பயிரை மேயும் காலம்! அதனால் நாட்டு நடப்பை விழிப்புடன் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதோ சமீபத்தில் நடந்த சம்பவம்:


தினமலர்: ஜனவரி 16,2010

நகரி:வரதட்சணை வழக்கில் இருவீட்டாரையும் சமரசம் செய்து வைப்பதாக கூறி, பணம் வசூலித்த டி.எஸ்.பி., இரு இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்.ஐ., இரு போலீசார் உட்பட, ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சென்னையைச் சேர்ந்த பத்ரிநாத்துக்கும், சித்தூர் மாவட்டம் புங்கனூர் மசூதித் தெருவைச் சேர்ந்த குருவப்பாவின் மகள் அருணாவிற்கும், 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இத் தம்பதிக்கு இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கணவனும் அவரது பெற்றோரும் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், மேலும் பணம் கொண்டு வரும்படி தொந்தரவு செய்வதாகவும், 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, அருணா புங்கனூர் போலீசில் புகார் செய்தார்.இதன் மீது வழக்கு பதிவு செய்த அப்போதைய புங்கனூர் எஸ்.ஐ., ராமகிருஷ்ணா, பத்ரிநாத் குடும்பத்தினரிடம் ஒரு தொகையை வசூல் செய்து தருவதாகவும், சமாதானம் செய்வதாகவும், அருணாவிடம் கூறி பணம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது. பத்ரிநாத்திடம் இருந்து வாங்கிய பணத்தில், அதிக தொகையை போலீசாரே எடுத்துக் கொண்டனர்.

இந்த வழக்கில், பத்ரிநாத்திடம் இருந்து போலீசார் எவ்வளவு பணம் பெற்றனர் என்பது பற்றி அறிந்து கொள்ள, அருணா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வழக்கு விசாரணையையும் புங்கனூர் போலீசார் துரிதப்படுத்தவில்லை. பத்ரிநாத்திடம் வாங்கிய பணத்தை, போலீசார் அருணாவிடமும் கொடுக்கவில்லை. பத்ரிநாத்திடமும் திருப்பி தரவில்லை.இந்நிலையில், அருணா, பத்ரிநாத் ஆகிய இரு குடும்பத்தினரும், சித்தூர் மாவட்ட எஸ்.பி., லட்சுமிரெட்டியை நேரில் சந்தித்து, நடந்த விவரங்களை கூறினர்.அதன் பேரில், பலமநேர் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர்கள், பத்மாகரரெட்டி,சீனிவாசுலு, எஸ்.ஐ., ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் நாராயணமூர்த்தி, நாகராஜ் ஆகிய ஆறு பேர் மீது விசாரணை நடந்தது. விசாரணையின் அறிக்கைப்படி, மாநில டி.ஜி.பி., கிரிஸ்குமார் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரையும், சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.



இதுபோல அப்பாவி மருமகள்களை ஏமாற்றும் விஷயங்களில் ஆண் பெண் என்ற பேதமே இல்லாமல் தான் நடக்கிறது இந்த ஏமாற்றுவேலைகள். அதற்கான உதாரணம் இதோ செய்தியாக வந்திருக்கிறது:




சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். "பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார். எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


போலிஸ் மட்டுமல்ல சில வக்கீல்களும் இந்தமாதிரி வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக உங்களுக்கு உதவி செய்வது போல பாசமாக இருக்கும் வக்கீல்களை நம்பாதீர்கள்.

நீங்கள் உங்கள் கணவரிடமிருந்து பெறப்போகும் மொத்த தொகையில் பெரும்பகுதியை உங்களுக்கே தெரியாமல் "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல" பக்குவமாக எடுத்துக்கொள்ளும் திறமைபடைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்ணுரிமை என்று பெரிதாகப் பேசி உங்களை வட்டமடிக்கும் வக்கீல்களை சுத்தமாக நம்பாதீர்கள்.

உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்தக் கேசுகளை பதிவு செய்ய உங்களுக்கு வக்கீலின் உதவியே தேவையில்லை. நீங்கள் போய் போலிஸில் புகார் கொடுத்தவுடன் வழக்கை அரசாங்கமே ஏற்று நடத்தும். அரசாங்க வக்கீல் தான் அரசு பணத்தில் இந்த வழக்கை நடத்துவார். அதனால் மருமகள்கள் தனியாக வழக்கறிஞர் வைத்து கேசை நடத்தவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அதே போல பஞ்சாயத்து செய்வதற்கும் எந்த இடைத்தரகரும் தேவையில்லை. பேரத்தை நீங்களே நேரடியாகப் பேசி முடித்து முழுத்தொகையையும் பெற்று உழைப்பின் பலனை சந்தோஷமாக அனுபவியுங்கள்.

இதோ அரசு வழக்கறிஞர் ஒருவர் மருகளை ஏமாற்ற முயற்சி செய்த செய்தி:



கோவை : கோவையில் வரதட்சணை வழக்கில், தொழிலதிபரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட அரசு உதவி வக்கீலை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர். கோவை, கணபதி, சிவானந்தபுரம் பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் ராஜகோபால் (60). இவரது மகள் சபீதா(20) எம்.இ., பட்டதாரி. இவருக்கும், கோவை ஆவராம்பாளையத்தில் வசிக்கும் துரை என்பவருக்கும், 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கணவன்-மனைவியிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர்.

வரதட்சணை கேட்டு கணவர் துரை துன்புறுத்துவதாக, சபீதா போலீசில் புகார் செய்தார். சமீபத்தில், வழக்கின் விசாரணையை முடித்த போலீசார், கணவர் துரை உள்ளிட்டோர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒப்புதல் கேட்டு, வழக்கு ஆவணங்களை, கோவை அரசு உதவி வக்கீல் நாகராஜனுக்கு அனுப்பினர். கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையான ஆதார ஆவணங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்கு, ராஜகோபாலனிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார் வக்கீல் நாகராஜன். இது தொடர்பாக ராஜகோபால், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதுவரை அரசு துறை அதிகாரிகளை மட்டுமே பொறிவைத்து பிடித்த போலீஸ் அதிகாரிகள், இந்த புகாரை மிகவும் சவாலாக எடுத்துக்கொண்டு நடவடிக்கையில் இறங்கினர்.

போலீசாரின் ஆலோசனைப்படி, அரசு உதவி வக்கீல் நாகராஜனிடம் ஒரு லட்சம் ரூபாயில் ரூ.15 ஆயிரத்தை முன் பணமாக தருகிறேன் என ராஜகோபால் கூறினார். லஞ்ச ஒழிப்பு துறையினர், "பினாப்தலின்' ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜகோபாலிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று காலை தனது வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கிய அரசு உதவி வக்கீல் நாகராஜனை, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து வக்கீல் நாகராஜன் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.1.5 லட்சம் ரொக்கம், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் இந்நடவடிக்கை கோர்ட் ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று அப்பாவி மருமகள்கள் ஏமாற்றப்படுவதை தேசிய பெண்கள் வாரியமும் உறுதிபடுத்தியிருக்கிறது:


"National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it is lack of awareness that is exploited by lawyers and police"


இது ஒன்றும் பழைய காலமல்ல. மருமகள்களை இனியும் யாரும் ஏமாற்றமுடியாது. இடைத்தரகர்களை அணுகி ஏமாந்துவிடாதீர்கள்! குறிப்பாக "மாமக்களிடம்" ஏமாந்துவிடாதீர்கள்! தைரியமாக களத்தில் இறங்குங்கள். பணப் பரிவர்த்தனையை நேரடியாகப் பேசி முடியுங்கள். மருமகள்களுக்கு கிடைக்கவேண்டிய முழு உரிமையையும் சட்டங்களின் பலன்களையும் நேரடியாக அனுபவியுங்கள்.

வாழ்த்துக்கள்!





6 comments:

  1. 498 A என்பதே 99% தவறாக பயன்படுத்தி வருகின்ற சட்டம். திருமணமான பெண்கள், தன் முன்னாள் காதலர்களிடம் வாழ்வதற்குத் தேவையான பணத்தை இந்த சட்டத்தின் மூலம் எடுக்கப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த சட்டம் இருந்தால்....498 BB என்று ஒரு தனி சட்டம் கொண்டு வந்து, ஆண்களுக்கும் இவ்வாறான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. ​தெய்வ​மே, இந்த பாடத்திட்டத்​தை எல்லாம் எனது 498ஏ ம​னைவிக்கு தாங்கள் முன்ன​ளே கற்றுக்​கொடுத்துவிட்டீர்களா? அல்லது இந்த விசயம் எல்லாம் 498ஏ ம​னைவியிடம் தாங்கள் கற்றுக்​கொண்டிர்களா? எனக்க ​​ஒரு உண்ம ​தெரிஞ்சாகனும் சாமீமீமீ....

    ReplyDelete
  3. //ஆண்களுக்கும் இவ்வாறான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.//

    கபிலன் அவர்களே,

    ஆண்களுக்கு எதற்குத் தனியாகப் பாதுகாப்பு வேண்டும்? எல்லா அதிகாரமும் மருமகள்களின் கையில் வந்துவிட்டால் அவர்களே எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்துக்கொள்வார்கள். அதனால் இருக்கின்ற சட்டங்களே போதும். முடிந்தால் மருமகள்களுக்கு புதிதாக சட்டம் இருந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. //தெய்வ​மே, இந்த பாடத்திட்டத்​தை எல்லாம் எனது 498ஏ ம​னைவிக்கு தாங்கள் முன்ன​ளே கற்றுக்​கொடுத்துவிட்டீர்களா? //

    சொல்லிக்கொடுத்து வருவதல்ல இந்தக் கலை. புத்திசாலியான எல்லா மருமகள்களுக்கும் இது பிறவியிலேயே சேர்ந்து வருவது. கொஞ்சம் மறந்துபோன மனங்களுக்கு நினைவூட்டுவதற்கு மட்டும் தான் இந்தப் பதிவுகளும் பாடங்களும்.

    ReplyDelete
  5. thangaludaiya aalosanai yendrum ennai pondra sagotharigaluku oru nalla paadhukappai tharam endru nambukiren. thangaludaiya sevai thodara valthukkal. neegal innum sila aalosanaigal sonnal nandraga irukum. by rathi

    ReplyDelete
  6. எனக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் பாதி வருடங்கள் அம்மா வீட்டிலே இருக்கிறேன். முதலில் குழந்தை இல்லை என்று சொல்லி என்னை ரொம்ப கஷ்ட படுத்தி பின்பு நான் அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். பிறகு மருத்துவமனைக்கு சென்று அனைத்து பரிசோதனையும் செய்யுது பார்த்தேன். எந்த ஒரு பிரச்சனை இல்லை. குழந்தை பிறக்கும் என்று கூறினார்கள். ஆனால் பிறக்க வில்லை. பின்பு அவருக்கு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. ஆனால் அவர் ஒத்து கொள்ள வில்லை. மருத்துவமனை வர மறுத்து விட்டார். நானும் குழந்தை வேண்டாம் இப்படியே வாழ்த்து விடலாம் என்று இருந்தேன். ஆனால் என் மாமியார் என் மாமனார் ஊர் முழுக்க நான் மலடி என்று கூறி. அனைவரும் என்னிடம் வந்து கேக்க தொடங்கி விட்டார்கள். கிராமத்து பகுதி என்பதால் அனைவரும் இதை சொல்லி சொல்லி மனத்தை காய படுத்தினார்கள். இதற்கு பிறகு தான் . என்னை கொடுமை படுத்த தொடங்கினார்கள். நானே பலி ஏற்று கொண்டு விலகி செல்ல வேண்டும் என்று கொடுமை. வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினார்கள். நானும் அப்பாவிடம் இருந்து வாங்கி கொடுத்தேன். ஆனால் வீட்டுக்கு எதும் வாங்கி கொடுக்காமல் பட்டினியாக இருக்க வைத்தார்கள். அப்பா மாதம் ஒரு முறை வந்து அனைத்து வாங்கி கொடுத்து கொண்டு இருந்தார். சிறு சிறு சண்டை போட்டு அடிக்க தொடைக்கினார். ஒரு நேரம் கை உடைத்து விட்டார். நானும் அப்பா, அம்மாவிடம் கீழே விழுந்து விட்டேன் என்று கூறினேன். அதுக்கும் அப்பா மருத்துவமனை அழைத்து சென்று பார்த்து கொண்டார். ஆனால் அவர் வீட்டில் கண்டு கொள்ளவில்லை. நான் நடிப்பதாங்க கூறினார்கள். அவன் அடி பொறுக்காமல் அடிக்கடி அம்மா வீட்டுக்கு வந்து விடுவேன். ஆனால் அவன் கூப்பிட வர மாட்டார். தாலி கொடு என்று 50 பேர்களை சாராயம் குடிக்க வைத்து குடி வந்து பிரச்சனை செய்தார். வேறு வழி இல்லாமல் மறுபடி வாழ சென்றேன். அவர் திருந்த வேண்டும். என்று தான் அம்மா வீட்டுக்கு வந்தேன். ஆனால் அவர் வீட்டில் குழந்தை பிறக்காது தாலி வாங்கி வா வேர் திருமணம் பண்ணி வைக்கிறேன் என்று கூறி உள்ளார்கள் . எப்படியாவது நானே வாழ பிடிக்க வில்லை என்று கூறி. போலீஸ் போகாமல் தாலி வாங்க வேண்டும் என்று ஊர் முழுவது நான் அவனை அடிப்பதாங்க, என் மாமனாரை அடித்ததாக. கத்தியில் குத்த வந்தக்காக சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அம்மா வீட்டுக்கும் அங்கையும் மாறி மாறி வாழ்ந்து. இத்தனை பலி சொல் வாங்கி கொண்டு வாழ்ந்தேன். சில நேரம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியது. 3 லட்சம் கேட்டு மறுபடி சண்டை போட்டான் . நான் முன்பே லட்ச கணக்கில் வாங்கி கொடுத்து விட்டேன் இனி வாங்கி தர மாட்டேன் என்று கூறினேன். அவன் தொடர்ந்து சண்டை போட்டு கொண்டே இருந்தான். ஒரு நாள் ஒரு மந்திரவாதி பொம்பளையே அழைத்து வந்தான். வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என்று கூறினால் . அதற்கு பொம்மை அது இது என்று கேட்டால். நான் பூஜை செய்ய மறுத்து விட்டேன். அதுக்கு சண்டை போட்டான். பணம் வாங்கி கொடு. இல்லை இந்த பொம்பளை வச்சு எதாவது பண்ணிடுவேன் என்று கூறினார். அந்த பொம்பளை அவனிடம் இவளுக்கு குழந்தை பொறக்காது. இவ கூட இருந்த நீ சோத்துக்கே கஷ்ட படுவாய். என்று கூறி விட்டால். அப்போ இருந்து அவன் பேசும் வார்த்தை வாழ பிடிக்க வில்லை. சாக நினைத்தேன். அப்பா அம்மாக்கு என்னால் நிறைய பிரச்சனைகள் . செத்து விடலாம் என்று நினைத்தேன். அவன், அவன் தங்கச்சியிடம் போனில் பேசுவது கேட்டேன். நான் செத்தால் தாராளமாக மறுமணம் பண்ண முடியும். என்று சொல்லி கொண்டு இருந்தார்கள். அப்போதே நான் எதற்கு சாக வேண்டும், அம்மா வீட்டுக்கு சென்று விடலாம் என்று . என்னை அம்மா வீட்டில் விட சொல்லி விட்டேன் அவனும் கொண்டு வந்து விட்டு சென்றான். இங்கு வந்து 2 வருஷம் ஆகிறது . கிராமம் முழுவது என்னை தப்ப சொல்லி வேதனை படுத்தி கொண்டு இருக்கிறார்கள். நான் அவனோடு வாழ விருப்ப வில்லை. ஆனால் நான் செத்த போதும் என்று நினைச்ச குடும்பத்தை நான் என்ன செய்வது. அவன் பொய் சொல்லி நிஜம் என்று நம்ப வைத்து விடுகிறான். என்னால எதும் நிறுமிக்க முடில வில்லை. இதுவரை அவன் எனக்காக ஒரு செலவு செய்ய வில்லை. நானும் அப்பா அம்மாவிடம் பணம் வாங்கி சமாளிச்சேன். ஆனால் இப்போது அவன்தான் என்னக்கு எல்லாம் செலவு பன்னதாக சொல்கிறார். அது கூட பரவலை நான் அம்மா வீட்டுக்கு வரும் போது அவன் பணம் எல்லாம் எடுத்து வந்து விட்டேன் என்று பொய் சொல்லுகிறான். பொய்யாக இருந்தாலும் அவன் சொல்லுவது நம்பராக. நான் உண்மையை சொன்னாலும் கேக்க யாரும் இல்லை. அந்த கிராமத்தில். நான் போலீஸ் செல்ல என்ன பண்ண வேண்டும்... என்னிடம் ஆதாரம் இல்லை.. அவன் போனில் பேசின பதிவு இருக்கிறது. ஆனால் அதில் அவன் என்னை எல்லாரிடம் குறை கூறுவது போன்று பதிவு மட்டும் இருக்கிறது. இதை கொண்டு போனால். என்னை தான் குறை கூறுவார்களா என்று தோன்றுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்...உதவி பண்ணுங்க. எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும். 5 வருஷம் நடந்தது சுருக்கி சொல்லி இருக்கேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்