"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி

மருமகள்களே இதுவரை நீங்கள் வரதட்சணை தடுப்புச்சட்டங்கள் பற்றிய மூன்று பாடங்களைப் படித்திருக்கிறீர்கள்.

நீங்கள் இதுவரை படித்த பாடங்களில் வரதட்சணை தடுப்புச்சட்டம் (Dowry Prohibition Act) மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC498A) ஆகிய சட்டப்பிரிவுகளைப் பற்றி விளக்கியிருந்தேன்.

அடுத்த முக்கியமான பாடமான குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்திற்கு போவதற்கு முன் இதுவரை நடத்தப்பட்ட பாடங்கள் எந்த அளவிற்கு எளிமையாக இருந்தது, எத்தனை மருமகள்கள் புரிந்துகொண்டார்கள் என்று தெரிந்து கொள்ள இது ஒரு சுய பரிசோதனை. மருமகள்கள் தங்களுக்குள்ள சட்டங்களைப்பற்றி நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்ற அக்கறையில் மருமகள்களுக்காவே இந்த சிறப்பு செயல்முறை விளக்கப் பாடத்தை உருவாக்கியிருக்கிறேன்.

"செத்தால் தான் சுடுகாடு தெரியும்" என்று ஒரு சொல்வழக்கு இருக்கிறது. அது மருமகள் விஷயத்தில் எடுபடாது. அதனால் வரதட்சணை அல்லது மருமகள் கொடுமை தடுப்புச்சட்டத்தை எப்போது பயன்படுத்தவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் கொடுமைக்கு உள்ளாகும் வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. அதற்கு முன்பாகவே இந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கொடுமைகளைப்பற்றி நன்கு பகுத்துணர்ந்துகொள்ளும் திறமையை நீங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் எப்போதும் நீங்கள் விழிப்பாக இருந்து உங்களுக்கு கணவராலும் அவரது குடும்பத்தாலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இழைக்கப்படும் கொடுமைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப சட்டங்களைப் பயன்படுத்தி அவர்களை அடக்கியாள முடியும்.

மருமகள்கள் சட்டத்தை நன்கு புரிந்துகொள்வதற்காகவே பெண்களின் தோழர், மருமகள்களின் விடுதலை விரும்பி பாரதியாரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். கீழே உள்ள வீடியோவில் அதைக் காணுங்கள். பிறகு நீங்கள் கண்ட காட்சிகளில் உள்ள பெண்ணுரிமை சட்டங்கள் தொடர்பான சில விளக்கங்களை வீடியோவைப் பார்த்த பிறகு தொடரலாம்.





மருமகள்களே, வீடியோவைப் பார்த்து விட்டீர்களா. இப்போது சட்டங்களைப் புரிந்துகொள்வதற்கு சில விளக்கங்களைக் காணலாம். அதற்கு முன் IPC498A வை ஒரு முறை நினைவிற்கு கொண்டு வாருங்கள். மறந்து போன மருமகள்கள் இங்கே சென்று ஒரு முறை படித்துக்கொள்ளவும் வரதட்சணை தடுப்புச் சட்டம் பாடம் 3

1. காட்சியின் தொடக்கத்தில் பால்காரர், மளிகைக் கடைக்காரார், வீட்டின் சொந்தக்காரர் ஆகிய மூவரும் தங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அவை கொடுக்கப்படவில்லை.

2. அடுத்த காட்சியில் இந்த மூவரும் பாரதியாரின் மனைவியிடம் கொடுக்கவேண்டிய பணத்தைக் கேட்டு மனம் புண்படும்படி பேசுகிறார்கள். இது மனைவிக்கு கணவனால் மறைமுகமாக ஏற்பட்ட கொடுமையாகும். இதில் மனதளவில் பாதிப்பு ஏற்படலாம். இது IPC498A பிரிவின் கீழ் வரும் கொடுமையாகும்.

உங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் கணவராலோ அல்லது அவரது குடும்பத்தாலோ உருவாக்கப்படுகிறதா என்று விழிப்புடன் கவனியுங்கள்.

3. அடுத்து வரும் காட்சியில் மனைவி வீட்டில் சமைப்பதற்கு கூட அரிசி இல்லாமல் பக்கத்து வீட்டில் சென்று அவமானப்பட்டு கடன் வாங்கி வருகிறார். பக்கத்து வீட்டுக்காரர்கள் மனைவியை அவமானப்படுத்தினால் அதுவும் கணவனால் மறைமுகமாக ஏற்படுத்தப்பட்ட கொடுமையாகக் கருதலாம். அதனால் இதுவும் IPC498A பிரிவின் கீழ் கணவனும் அவனைச் சார்ந்தவர்களும் (கணவனுக்கு தெரிந்தவராக பக்கத்துவீட்டுக்காரர்களாக இருந்தால் கூட போதும்) கொடுமை செய்ததாகக் கருதப்படும்.

உங்கள் கணவருக்கோ, அவரது குடும்பத்திற்கோ தெரிந்தவர்கள், நண்பர்கள், அல்லது உறவினர்கள் இது போல உங்களது மனம் புண்படும்படி நடந்து கொள்கிறார்களா என்று கவனமாக கண்காணியுங்கள்.

4. கடைசியில் வரும் காட்சி தான் அப்பட்டமான IPC498A பிரிவின் கீழ் வரும் கொடுமையை நேரடியாக விளக்கும் காட்சியாகும். கணவன் தன் மனைவிக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொடுக்கவில்லை. அப்படியே மனைவி அவமானப்பட்டாவது கடன் வாங்கி வந்து சமைப்பதற்கு தயார் செய்தாலும் சமைப்பதற்குத் தேவையான அந்தப் பொருட்களை மனைவிக்குத் தெரியாமல் உணவு சமைக்க முடியாதபடி தூக்கியெறிந்து வீணடிப்பது மிகப்பெரிய கொடுமையாகக் கருதப்படும். இது மிகச்சரியாக IPC498A பிரிவின் கீழ் பதிவு செய்யவேண்டிய புகாராகும்.

உங்களுக்கு நேரத்திற்கு உணவு கொடுக்கப்படுகிறதா அல்லது உங்களுக்கு இருக்கும் உணவை யாராவது எடுத்து எங்காவது மறைத்துவைத்து விடுகிறார்களா, குறிப்பாக மாமியார்கள் இதுபோல உங்களுக்குப் பிடித்த உணவுவகைகளை பீரோவில் வைத்து பூட்டிவைத்து விடுகிறார்களா என்று மிகுந்த விழிப்புடன் இருந்து பார்த்துக்கொள்ளுங்கள். சில சமயம் சமைக்கும்போது மாமியார் கைதவறியோ அல்லது மறதியாகவோ
சமையலறையில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைத்துவிட்டால் அது உங்களின் கண்களிலிருந்து அந்தப் பொருட்களை மறைப்பதற்காகச் செய்யும் கொடுஞ்செயலாகக் கருதப்படவேண்டும். இந்தவகையான கொடுமையை தாங்கள் மாமியார் வீட்டில் அனுபவித்ததாக பல மருமகள்கள் தங்களது புகார்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் கவனமுடன் இருங்கள்.

மேலும் இந்த வீடியோவில் மற்றொரு சட்டமும் அடங்கியிருக்கிறது. அது தான் இந்திய குற்றநடைமுறைச் சட்டப் பிரிவு 125. இந்திய குற்றநடைமுறை சட்டப் பிரிவு 125-ன் (Code of Criminal Procedure-CrPC 125) படி ஆண் என்பவன் (நன்றாக கவனிக்கவும் ஆண் மட்டும் தான்) தனது மனைவி, குழந்தை, மற்றும் பெற்றோர்களை தகுந்த உணவு, உடை, உறைவிடம் கொடுத்து பராமரிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவன் தண்டனைக்குள்ளாவான். இந்திய சட்டப்படி இது கொடிய கிரிமினல் குற்றமாகக் கருதப்படும்.

ஆனால் பெண் அல்லது மனைவி எவ்வளவு வசதியாக இருந்தாலும், கைநிறைய சம்பாதிக்கும் நல்ல பணியில் இருந்தாலும் இது போன்ற செலவுகள் செய்து தனது கணவனையோ அல்லது குழந்தைகளையோ, தனது பெற்றோரையே பராமரிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. சட்டத்தில் மனைவியருக்கும், மருமகள்களுக்கும் முழு விலக்கு அளித்து அரசாங்கம் அவர்களுக்கு மரியாதை செய்திருக்கிறது. அதே சமயம் பெண்கள் தங்களின் பெற்றோர் வீட்டிலும், கணவரின் குடும்பத்திலும் உள்ள சொத்துக்களில் சமபங்கு பெறுவதற்கு முழு உரிமையையும் கொடுத்து இந்திய சட்டம் வழிவகை செய்துள்ளது. இந்த சட்டங்களைப் பயன்படுத்தி கையில் நாலு காசு சேர்த்துக்கொள்ளுங்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுவது தான் மனைவியருக்கும், மருமகள்களுக்கும் பாதுகாப்பு.

மேலுள்ள வீடியோவில் கடைசி காட்சியில் மனைவிக்கு இது போன்ற பாராமரிப்புகள் சரியாக செய்யப்படவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. மாறாக உணவு சமைக்கமுடியாதபடி உணவுப்பொருட்கள் தரையில் வீசப்பட்டு மேலும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். அந்த அப்பாவி மனைவியின் கெட்டகாலம், அப்போது ஆங்கிலேயரின் ஆட்சி இருந்ததால் இதுபோன்ற CrPC 125, Indian Penal Code 498A போன்ற சட்டங்கள் இல்லை. அதனால் பாரதியார் இதுபோன்ற மனைவியர் பாதுகாப்பு சட்டங்களிலிருந்து தப்பித்திருக்கலாம். அவரது நல்லகாலம் தப்பித்துக்கொண்டார்.

இதோ அந்த CrPC 125 உங்களது நோட்டுப்புத்தகத்தில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

125. Order for maintenance of wives, children and parents.

(1) If any person leaving sufficient means neglects or refuses to maintain-

(a) His wife, unable to maintain herself, (கவனியுங்கள் முதல் உரிமை மனைவிக்குத்தான்) or

(b) His legitimate or illegitimate minor child, whether married or not, unable to maintain itself, or

(c) His legitimate or illegitimate child (not being a married daughter) who has attained majority, where such child is, by reason of any physical or mental abnormality or injury unable to maintain itself, or

(d) His father or mother, unable to maintain himself or herself.


மேலுள்ள வாக்கியங்களில் கவனித்தீர்களா? எல்லா வாக்கியமும் ஆண் அல்லது கணவன் என்று பொருள்படும்படி "HIS" என்று தான் ஆரம்பித்திருக்கிறது. அதனால் உங்களது கணவர் உங்களை அனைத்து விதத்திலும் பராமரிக்க சட்டப்படி கடமைப்பட்டவராவார்.

என்றைக்குத் திருமணத்தின்போது இந்த முட்டாள்கள் தாலியை உங்களது கழுத்தில் கட்டுகிறார்களோ அன்றே CrPC 125 என்னும் இரும்புச் சங்கிலியை தங்களது கையில் கட்டிக்கொள்கிறார்கள். தாலியில் போடப்படும் முடிச்சு அவன் கையில் தானே இரும்புச் சங்கிலியால் போட்டுக்கொள்ளும் முடிச்சாகும். முட்டாள் கணவர்கள் இதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உணரமாட்டார்கள். அதுவரை நமக்குக் கொண்டாட்டம் தானே!

IPC498A ன் ரிமோட் கண்ட்ரோலை உங்களிடம் கொடுத்தது போல வழக்கம்போல் CrPC125 சங்கிலியின் மறுமுனையும் உங்கள் வசம் தான் ஒப்படைக்கப்படுகிறது. அதனால் மருமகள்களே உங்களுக்கு என்னவேண்டுமோ எல்லாவற்றையும் கொஞ்சம் கூட தயங்காமல் தைரியமாகக்கேட்டு உரிமையோடு வாங்கிக்கொள்ளுங்கள். சங்கிலியை லேசாக அசைத்து ஒரு குறிப்புக் காட்டினால் போதும் ஓடிவந்து வேண்டியதைக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம், போலிஸ், ஜெயில் தான்!

இந்த சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுக்குத் தேவையானதை உரிமையுடன் பெறுவதற்கு நீங்கள் கணவருடன் இருக்கவேண்டும் என்ற அவசிய கூட கிடையாது. கணவனின் ஒட்டு மொத்தக் கூட்டமும் பிடிக்காமல் தனியாகப் பிரிந்து வாழ்ந்தாலும் இந்த பராமரிப்புகளை குறையின்றி பெறலாம்.

மாமியார் வீடு பிடிக்கவில்லை, தனியாக வேறு வீட்டில் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்து அதற்குக் கணவர் ஒத்துழைக்கவில்லை என்றால் அது உங்களை மனதளவில் கொடுமை செய்வதற்கு சமம். அதனால் இதை IPC498A பிரிவின் கீழ் கொடுமை என்று கணவர் மீதும் மாமியார் மீதும் புகார் கொடுத்துவிட்டு நீங்கள் தனியாக வசதியான ஒரு வீடு பார்த்து இருந்து கொண்டு இந்த CrPC 125 பிரின் கீழ் ஒரு வழக்கைப் போட்டால் மாதந்தோறும் உங்களின் "அனைத்து வகையான" பராமரிப்பிற்கும் (Complete Maintenance) தேவையான பணம் உங்கள் வீட்டு வாசற்படிக்கே வந்து கதவைத்தட்டும். நீங்கள் எந்த வேலையும் செய்யவேண்டிய அவசியமில்லை. இதை விட வேறு என்ன வேண்டும்? சொர்க்கத்தில் கூட இது போன்ற வசதி கிடைக்குமா என்பது சந்தேகமே!

எனவே இந்திய மருமகளாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்கவேண்டும் என ஆனந்தக் கும்மியடியுங்கள். இந்திய மருமகள்களுக்கு மட்டுமே இந்த சிறப்பான பிறப்புரிமையை இந்திய அரசு செய்துகொடுத்திருக்கிறது. அதனால் இந்தப் பிறவியிலேயே இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேறு எந்த நாட்டிலும் மருமகள்களுக்கு இது போன்ற வசதிகள் கிடைப்பதில்லை.

இப்போது ஓரளவிற்கு உங்களுக்கு IPC498A-வைப்பற்றிய செயல்முறை விளக்கம் நன்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். இன்று மற்றொரு புதிய சட்டப்பிரிவான CrPC125 பற்றியும் தெரிந்துகொண்டீர்கள். இவற்றையெல்லாம் இங்கு படித்தபிறகு எந்த மருமகளாவது இந்த சட்டங்களை இதுவரை பயன்படுதியிருக்கிறீர்களா? அப்படி பயன்படுத்தியிருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்வதாக ஒரு சிறு சந்தோஷமடைவேன்.

வாழ்த்துக்கள்.



1 comment:

  1. நீங்கள் ஒரு ஆணாகத்தான் இருக்க வேண்டும்! உங்கள் பதிவு அனைத்தும் ஒரு வஞ்சக புகழ்ச்சியாக இருக்கிறது, யாரிடம் எப்படி அடி வாங்குநீர்கள் என்று தெரிய வில்லை, உங்களை நல்ல குனிய வைத்து கொட்டி இருக்கிறார்கள். உங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். எதற்கும் ஒரு முறை மன நல மருத்துவரை ஆலோசிக்கும்படி கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்