சென்னை:மனைவி, குழந்தைகளை பராமரிக்காத ராணுவ வீரருக்கு, ஓய்வூதிய பலன்கள் வழங்க, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் தாக்கல் செய்த மனு:எனக்கும், நீலகிரி வெலிங்டனில் பணியாற்றும் ராணுவ வீரர் சங்கர் என்பவருக்கும், 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு, 12 வயதில் மகன், ஒன்பது வயதில் மகள் உள்ளனர். வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக, என்னிடம் விவாகரத்து பெறும் வகையில், வெற்றுப் பேப்பரில் கையெழுத்து போடுமாறு மிரட்டினார்.நான் மறுக்கவே, என்னை தாக்கினார்.
ஆம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என்னையும், குழந்தைகளையும் கைவிட்டு விட்டார். கடந்த ஆண்டு ஜூலை முதல், என் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.எங்கள் இருவருக்கும் கூட்டாக வங்கியில் கணக்கு இருந்தது. ஏ.டி.எம்., மூலம் மாதம் 7,000 ரூபாய் எடுத்து வந்தேன். தற்போது அந்தக் கணக்கை முடித்து விட்டார். அவரது பணி ஆவணங்களில், "நாமினி' ஆக, என்னை தான் குறிப்பிட்டிருந்தார்.தற்போது, அவரது ஓய்வூதிய சலுகைகள் அனைத்தும், வேறொரு பெண்ணுக்கு கிடைக்கும் வகையில் செயல்படுகிறார். வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடுத்த வழக்கில், இடைக்கால நிவாரணமாக மாதம், 7,000 ரூபாய் எனக்கு வழங்க உத்தரவிட்டது.எனக்கு ஏற்பட்ட இழப்புக்காக, 30 ஆயிரம் ரூபாய் மற்றும் இருப்பிட வசதி அளிக்க, என் கணவருக்கு உத்தரவிட்டது.என்னையும், குழந்தைகளையும் பராமரிக்காததால், ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது என, ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். வரும் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். எனக்கு வர வேண்டிய பராமரிப்புத் தொகையை தராமல், அவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது. எனவே, ஓய்வூதிய பலன்களை வழங்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி சுகுணா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.செல்வராஜ் ஆஜரானார். விசாரணையை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து, அதுவரை ஓய்வூதிய பலன்களை வழங்க இடைக்காலத் தடை விதித்தார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்