"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


காக்க காக்க மருமகளே காக்க!

இந்தப் பதிவுகளில் இதுவரை வரதட்சணை தடுப்புச் சட்டங்களைப் பற்றியும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதைப்பற்றியும் தெரிந்துகொண்ட மருமகள்களுக்கு மேலும் ஒரு நற்செய்தி வந்திருக்கிறது!

வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளான 3 மற்றும் 4 வது பிரிவு பற்றி முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தேன். மாமியார் கொடுமையால் மறந்துபோன மருமகள்கள் இங்கே சென்று நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்
-->வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1

இந்த சட்டத்தின் 3-வது பிரிவுப்படி வரதட்சணை கொடுப்பதும் பெற்றுக் கொள்வதும் சட்டப்படி குற்றமாகும். சட்டம் இப்படி இருந்தாலும் நமது அரசாங்கம் மிகவும் பெரிய மனதுடன் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்த மருமகளையோ அல்லது அவர்களது பெற்றோர்களையோ 3-வது பிரிவுப்படி தண்டித்திருக்கவில்லை.
ஆனால் அதற்கு மாறாக வரதட்சணைப் புகார் என்று வந்தால் சட்டமும் அரசாங்கமும் கணவனையும் அவனது குடும்பத்தையும் மட்டுமே இந்த சட்டங்கள் மூலம் “நன்றாக கவனித்து” வருகிறார்கள். இது எழுதப்படாத சட்டம்.

இவ்வளவு சுதந்திரம் இருந்தாலும் பல
படித்த மருமகள்களுக்கு வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்துவதில் சற்று நெருடலான விஷயமாக இருப்பது வரதட்சணை தடுப்புச்சட்டத்தில் உள்ள 3-வது பிரிவாகும். நான் வரதட்சணைக் கொடுத்துத்தான் திருமணம் செய்தேன் என்று புகார் எழுதும்போது சட்டத்தின் 3-வது பிரிவுப்படி கணவனை மட்டும் அரசாங்கம் தண்டிக்கிறதே என்று மருமகள்களின் மனம் வேதனை அடையுமல்லவா. என்ன இருந்தாலும் மருமகள்களுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கும். அந்த மனசாட்சியும் உறுத்துமல்லவா?

அதனால் இதுபோன்ற நேர்மையான மருமகள்களின் மனஉறுத்தலை உணர்ந்துகொண்ட தேசிய பெண்கள் வாரியம் ஒரு தாய்மை உணர்வுடன் செயல்பட்டு மருமகள்கள் இந்த வரதட்சணை தடுப்புச் சட்டத்தை எந்தவித மனஉறுத்தலும் இல்லாமல் தாராளமாக தடையின்றி பயன்படுத்திக்கொள்ள வசதியாக வரதட்சணை கொடுப்பவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற பெருந்தன்மையான கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்திருக்கிறது.

வரதட்சணை கொடுப்பதை சட்டத்தின் மூலம் தடுக்காமல் அதற்குமாறாக வரதட்சணை கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் இந்த புதிய சட்ட திருத்தம் மூலம் நாட்டில் வரதட்சணையை அறவே ஒழித்துவிடலாம் என்று உறுதியாக நம்புகிறார்கள் நமது தலைவிகள். படித்த பெரிய தலைவிகள் சொல்வதில் ஏதாவது ஒரு உள் அர்த்தம் இருக்கும். இதன் உள்நோக்கத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதில் மருமகள்களுக்கு உள்ள ஏராளமான நன்மைகள் உங்களுக்குப்புரியும். தலைவிகள் சொல்வதைக் கேட்டால் மருமகள்களுக்கு என்றும் நன்மைதான்.

அதனால் மருமகள்கள் அனைவரும் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு முழு ஆதரவு கொடுத்து இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவவேண்டும். இந்த புதிய சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்தால் மருமகள்களின் கரங்கள் மேலும் வலுப்படும். கணவனின் குடும்பத்தில் கொடிகட்டிப் பறக்கலாம். எந்தவிதமான காரியங்களையும் எளிதாக சாதித்துக்கொள்ளலாம். கொடுப்பதுபோலக் கொடுத்து பிறகு அதை வரதட்சணை என்று சொல்லலாம். அல்லது எதுவும் கொடுக்காமலே வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லலாம். அணு அளவும் பயப்படவேண்டாம். ஏனென்றால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் கணவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் ஒரு கலக்கம் வந்துவிடும். அதைத் தக்கவிதத்தில் பயன்படுத்தும் முழுக்கட்டுப்பாடும் மருமகள் வசம்தான். பிறகென்ன கவலை.

இப்போது இருக்கும் வரதட்சணை தடுப்புச்சட்டமும் அப்படித்தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த புதிய சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால் கணவனும் அவனது குடும்பமும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்திருந்தாலும் இந்த சட்டத்திலிருந்தும், மருமகளிடமிருந்தும் தப்பிக்கவேண்டுமென்றால் இருக்கின்ற ஒரே வழி “காக்க காக்க மருமகளே காக்க” என்று மருமகளைத் தான் தினம் தினம் சுற்றி வரவேண்டும்.

இப்போது மருமகள்களுக்கு இந்த சட்ட திருத்தத்தின் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அதுதொடர்பான செய்தியை படித்து மகிழுங்கள்.


====================================================
மார்ச் 25,2010

புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது. தற்போதைய வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், வரதட்சணை கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்குமே சமஅளவு தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, இருவருக்கும் குறைந்தது ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அல்லது கொடுக்கும் வரதட்சணையின் மதிப்புக்கு ஈடான அபராதம் ஆகியவற்றில் எது அதிகமோ, அது தண்டனையாக வழங்கப்படும்.

இவ்வாறு சட்டம் இருந்தாலும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே வரதட்சணை கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டுமே வழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.

வரதட்சணை கொடுப்பவர்கள், தானே முன்வந்து புகார் கொடுத்தால், அவர்களை குற்றவாளிகளாக கருதாமல், பாதிக்கப்பட்டவர்களாக பார்க்க, இந்த திருத்தம் முதல் முறையாக வழி வகுத்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும்.


இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,'வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால், மணமகள் வீட்டார், வரதட்சணை தொடர்பான புகார்களை தெரிவிக்க முன் வருவதில்லை. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இதை தவிர மற்றொரு திருத்தமும், இச்சட்டத்தில் மேற்கொள் ளப்பட உள்ளது. அதாவது, மணமகன் அல்லது மணமகள் வீட்டார் தங்களுக்குள் வழங்கும் பரிசு பொருட்களும், தற்போதைய சட்டப்படி வரதட்சணையாக கருதப்படுகிறது. எனவே, இருவீட்டார் இடையே வழங்கப்படும் பரிசுப் பொ ருட்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது; இல்லையென்றால், அதுவும் வரதட்சணையாக கருதப்படும். சமூக நெருக்கடி காரணமாகவே, மணமகள் வீட்டார் வரதட்சணை கொடுக்கின்றனர் என்ற தொடர் விவாதத்தின் காரணமாகவே, இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

======================================================



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்