பெண்ணை அவமதிக்கும் இந்திய ஆண்கள்

ஆண்களுக்கு எப்போதுதான் புத்தி வருமோ? பெண் என்றால் ஏன் இப்படி அவமரியாதை செய்கிறார்கள்?

மருமகள்களே,

நீங்கள் சாமர்த்தியமாக வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தினால்தான் குடும்பத்தில் உங்களுக்கு மரியாதை இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தவே இந்த செய்தி வந்திருக்கிறது. படித்து நன்றாக மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.


புதுடில்லி: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறியதால் புதுடில்லி விமான நிலையம் பரபரப்படைந்தது. இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 6இ 179 என்ற விமானம் புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரானது. காலை 8.10 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமான நிலையம் கடும் பனிப்பொழிவாக காணப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்படுவது தாமதமானது.ஒருவழியாக பனி மூட்டம் குறைய துவங்கிய உடன் சுமார் 9.40 மணியளவில் மீண்டும் விமானம் புறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் தங்களது இருக்கையில்வந்தமர்ந்தனர். பின்னர் விமானத்தை இயக்குபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.அதில் பெண் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தியடைந்த பயணிகள் தங்களின் பயணம் குறித்து முணுமுணுக்கத் துவங்கினர். இதில் ஒரு பயணி தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து சென்று பெண் விமானி விமானத்தை இயக்க கூடாது. பெண் ஒருவர் விமானம் ஓட்டினால் பயணம் முழுமையாக இருக்காது என்றும் இவரை நம்பி நாங்கள் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கூறினார். இதனையடுத்து பயணிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி செய்தனர்.இருப்பினும் பயணிகள் சமாதானம் அடையாததால் செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மாற்று ஏற்பாடாக ஆண் விமான ஒட்டி மூலம் விமானம் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 40 நிமடங்கள் விமானநிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

பெண்ணை அவமதிக்கும் இழிநிலை இன்னும் இந்த நாட்டில் இருக்கிறது. அப்படியென்றால் குடும்பங்களில் மருமகள்களின் நிலை எப்படி ஒரு ஆபத்தான நிலையில் இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். குடும்பங்களில் உங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்குத்தான் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் (IPC498A, Domestic Violence Act) இருக்கின்றன. புத்திசாலி மருமகள்கள் அதைப் பக்குவமாகப் பயன்படுத்தினால் இந்த பெண் விமானிக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு தங்களின் கணவனின் குடும்பத்தில் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள்!

வரதட்சணை சட்டத்தை பயன்படுத்தலாமா? வேண்டாமா?

இந்தியாவில் மருமகள்களுக்காக பல சிறப்புச் சட்டங்கள் இருக்கின்றனவென்று பல மருமகள்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அந்த சட்டங்களைப் பற்றியும், அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றியும் முந்தைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

அந்தப் பதிவுகளைப் படித்திருந்தாலும் பல மருமகள்களுக்கு இன்னமும் அவற்றைப் பயன்படுத்தலாமா? அவற்றைப் பயன்படுத்தினால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுமா? என்ற எண்ண அலைகள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இதுபோன்று “மதில்மேல் பூனையாக” தவித்துக்கொண்டிருக்கும் பல மருமகள்களின் சந்தேகம் நீங்கி தெளிவு பிறப்பதற்காக இந்த செய்தியை உங்களுக்கு அளிக்கிறேன்.

சமீபத்தில் பரபரப்பாக செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றில் நடிகர் ஒருவர் பாலியல் கொடுமை செய்ததாக ஒரு நடிகை புகார் கொடுத்து அது வழக்காக வந்திருந்தது என்று நீங்கள் படித்திருப்பீர்கள். அதற்கு நடிகர் மறுப்பு தெரிவித்து நடிகை தனக்கு கொடுக்கவேண்டிய பணத்தை தான் திருப்பிக் கேட்டதால் தன்மீது இந்த பொய்யான புகாரை கொடுத்ததாக செய்தியில் வந்திருந்தது.

இந்த செய்தியின் மூலம் மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. பணம் தொடர்பாக நடிகர் கூறியிருப்பது “சிவில்” பிரிவு குற்றமாகும். ஆனால் நடிகை கூறியிருக்கும் பாலியல் கொடுமை என்பது “கிரிமினல்” குற்றப்பிரிவில் வரும். இதற்குத்தான் வலிமை அதிகம். வரதட்சணைக் கொடுமையும் “கிரிமினல்” குற்றப்பிரிவு சட்டத்தின் கீழ் வருகிறது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

இப்போது பின்வரும் செய்தியைப் படித்துக்கொள்ளுங்கள். பிறகு மேலும் சில விளக்கங்கள் தருகிறேன்.


வளரும் கலைஞர்கள் இந்த மாதிரி ஒருவர் மீது ஒருவர் பொய்யான புகார்களைக் கொடுத்து பரபரப்பேற்படுத்தாமல் சமாதானமாகப் போகப் பாருங்கள், என நடிகர்கள் பாக்யாஞ்சலி – வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை கூறினார்.

உன்னையே காதலிப்பேன் என்ற படத்தில் அறிமுகமான இணை தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான வேலு செக்ஸ் தொந்தரவு கொடுப்பதாக அந்த படத்தின் கதாநாயகி பாக்கியாஞ்சலி சென்னை வேப்பேரி போலீசில் புகார் கொடுத்தார்.

ஆனால் பாக்கியாஞ்சலி தன்னிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் இருப்பதாகவும், அதைக் கேட்டபோது தன்மீது, பொய்ப் புகார் கொடுத்ததாகவும் போலீசில் வேலு புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று பாக்கியாஞ்சலியும், வேலுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை இணைத்து விசாரிப்பதற்கு நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா, ’2 பேர் கொடுத்த புகாரும் பொய்யானது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களுக்கு இடையே இருக்கும் தகராறு சிவில் பின்னணியில் இருப்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அந்த புகார்களை முடித்துவிட்டனர். அவர்கள் விவகாரத்தில் மேல் விசாரணை தேவையில்லை என்று விசாரணை கைவிடப்பட்டுவிட்டது’ என்றார்.

மேலும் அந்த வழக்குக்கான கோப்புகளையும், பரிமாறப்பட்ட காதல் கடிதங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார் அரசு வக்கீல்.

வளரும் கலைஞர்களுக்கு இது தேவையா?

அவற்றைப் பரிசீலித்த நீதிபதி அக்பர் அலி, இந்த புகார்களின் உண்மைத் தன்மை சந்தேகத்துக்கிடமானது என்பதை ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து, ’2 பேருமே வளர்ந்து வரும் நடிகர்கள். தொழிலில் கவனம் செலுத்தாமல் ஒருவர் மீது ஒருவர் பொய்யான புகார் கூறிக்கொண்டிருந்தால் பிரச்சினை வளர்ந்து கொண்டுதான் செல்லும். அது பரபரப்பு செய்தியாக அமையுமே தவிர வேறு பயனில்லை. எனவே 2 தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்வது நல்லது. நான் வழக்கை 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

எனவே இருதரப்பும் வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.


செய்தியைப் பார்த்தீர்களா? போலிஸ் விசாரணைக்குப் பிறகு இரண்டுமே பொய் என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் நடிகை பயன்படுத்தியிருக்கும் குற்றச்சாட்டு பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடிய குற்றப்பிரிவைச் சார்ந்தது. ஒரு ஆண் பாலியல் கொடுமை செய்தான் என்று பொய்யாகக் கூறுவது உண்மையான கற்பழிப்புக் குற்றத்தை விட கொடிய குற்றமாகும். ஆனால் நடிகை சர்வசாதாரணமாக இந்தக் குற்றச்சாட்டை பொய்யாக பயன்படுத்தியிருக்கிறார். இது நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்தபிறகும் சும்மா தூசியை தட்டிவிடுவதுபோல நீதிபதி சமாதானமாகப் போய்விடுங்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.

இதிலிருந்து மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் மருமகள்கள் கணவனுக்கெதிராக எத்தகைய கொடுமையான குற்றச்சாட்டையும் தயங்காமல் கூறலாம். கடைசியில் அது பொய் என்று தெரிந்தால் கணவன்தான் மனைவியிடம் சமாதானமாகப் போகவேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிடுவார்கள் சட்ட மேதைகள். பொய் சொன்ன மருமகளுக்கு எந்த தண்டனையோ, பாதிப்போ ஏற்படாது என்று உறுதியாக நம்பலாம். இதுதான் வரதட்சணை வழக்குகளில் நீதிமன்றங்களில் இன்றுவரை நடந்துகொண்டிருக்கும் நடைமுறை.

அதனால் வரதட்சணை சட்டங்களை எந்தவித தயக்கமும் இன்றி உங்களின் வசதிக்கேற்ப பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்!